நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - அரியானாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை


நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - அரியானாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை
x

மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அரியானா போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சண்டிகர்,

டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலியான டாக்டர் உமர் கடந்த 10-ந் தேதி அரியானாவில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு வந்த பாதைகளில் போலீசார் இடைவிடாமல் விசாரித்து வருகிறார்கள். குறிப்பாக அவர் எங்கெல்லாம் நின்றாரோ? அங்கு விசாரணை நடத்தப்படுகிறது. டெல்லியில் தொடர் வாகன தணிக்கை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா மற்றும் உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்.ஐ.ஏ. விடுவித்துள்ளது.

முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட மருத்துவர் உமருக்கும், பரிதாபாத்தின் அல்-பலா பல்கலைக். மருத்துவர்களுக்கும் இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரியானா மாநிலம் நுஹ் பகுதியில் இன்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த பகுதியில் ஏற்கனவே வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அரியானா போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

1 More update

Next Story