அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம்: பெண்களிடம் கருத்துகளை கேட்டறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் குறித்துக் கருத்துகளைக் கேட்டறிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம்: பெண்களிடம் கருத்துகளை கேட்டறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். ஆனால், மெட்ரோ ரெயிலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டதால், பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களில் 18 லட்சம் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்துள்ளார்கள் என்று டெல்லி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. முதல் நாளான நேற்று 13.66 லட்சம் பெண்களும், இன்று 4.55 லட்சம் பெண்களும் பயணித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்துள்ள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் குறித்துக் கருத்துகளைக் கேட்டறிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேருந்தில் பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், பெண்களிடம் திட்டத்துக்கான வரவேற்பு குறித்தும், குறை -நிறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வேலைக்கும் செல்லும் பெண்கள் 11 சதவீதம் பேர் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் பெண்களின் பயணத்தை எளிதாக்கும். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. இது போன்ற திட்டங்களை அவர்கள் பாராட்ட முன்வரவேண்டும்

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இலவசப் பயணம் குறித்து பெண்களிடம் கருத்துக்களைக் கேட்டறிய சில பேருந்துகளில் இன்று நான் பயணம் செய்தேன். அப்போது மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கடைகளுக்குச் செல்லும் பெண்களிடமும் இது குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தேன். மருத்துவமனைக்கு நாள்தோறும் செல்லும் சில பெண்களையும் சந்தித்துப் பேசினேன். அனைவரும் இந்தத் திட்டத்துக்கு மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்கள் என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் ஓடும் 5,600 அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்காக ஆம் ஆத்மி அரசு ரூ.140 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com