

புதுடெல்லி,
டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ், தன்னை ஆம் ஆத்மி கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக டெல்லி துணை நிலை ஆளுநரிடம் அளித்த புகாரால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்றதாகவும், இந்த ஆலோசனை முடிந்தவுடன், ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் தாக்குதல் நடத்தியதாக தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஆத் ஆத்மி கட்சி, டெல்லி
தலைமைச்செயலாளர் கூறிய குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியது என்றும் பாரதீய ஜனதா கட்சியின் கட்டளையின் பேரில் தலைமைச்செயலாளர் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.