போராடும் விவசாயிகளுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு:நாளை முழு அடைப்புக்கு ஆதரவு

விவசாயிகள் போராட்டம் : இங்கு நான் ஒரு முதல்வராக வரவில்லை. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கூறினார்.
போராடும் விவசாயிகளுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு:நாளை முழு அடைப்புக்கு ஆதரவு
Published on

புதுடெல்லி,

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது.

அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இதனால் மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் டெல்லிவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 12-வது நாளாக தொடர்ந்தது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர்.

டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் அறிவித்திருக்கும் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தனது ஆதரவை நேற்று தெரிவித்திருந்த நிலையில், விவசாயிகளுக்கு டெல்லி அரசு செய்து கொடுத்திருக்கும் அடிப்படை வசதிகளை முதல்வர் கேஜரிவால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

டெல்லி - அரியானா எல்லைப் பகுதியான சிங்கு எல்லைக்கு முதல்வர் கேஜரிவால் சென்ற போது அவருடன் சில அமைச்சர்களும், கட்சியின் எம்எல்ஏக்களும் உடன் சென்றிருந்தனர்.

இந்த ஆய்வு குறித்து பேசிய கெஜரிவால், அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யச் சென்றேன். டெல்லியில் உள்ள மைதானங்களை, விவசாயிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் சிறைகளாக மாற்ற அனுமதி தரும்படி எங்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், விவசாயிகளுக்கு எந்த கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதில் எங்கள் கட்சி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர். இங்கு நான் ஒரு முதல்வராக வரவில்லை. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன். விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து உதவி செய்ய வேண்டியது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com