டெல்லி முதல்-மந்திரி தாக்குதல் விவகாரம்; ஆட்டோ ஓட்டுநர் கைது

ராஜேஷுடன் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சாட்டிங் வழியே தொடர்புடைய 10 பேரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. பதவியேற்றது முதல் அவர் பல்வேறு கள பணிகளில் இறங்கி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்தபோது அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி ரேகா கடந்த 20-ந்தேதி காலையில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, ஒருவர் அவரை திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்-மந்திரி ரேகா குப்தா மக்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது, அவரிடம் சில ஆவணங்களை கொடுப்பது போன்று கொடுத்து விட்டு, திடீரென அவரை தாக்கினார். இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், அவர் உடல்நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
இந்த தாக்குதலை நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ராஜேஷ் கிம்ஜி (வயது 41) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
இதுபற்றி ராஜேஷின் தாயார் பானுபென் கூறும்போது, நாய்களின் மீது அவன் அன்பு கொண்டவன். டெல்லியில் நாய்கள் பிடித்து செல்லப்படுவதில் வருத்தம் அடைந்து இதுபோன்று நடந்து கொண்டான். நாங்கள் ஏழைகள். என்னுடைய மகன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் முதல்-மந்திரியிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என கூறினார்.
ரிக்சா ஓட்டி வரும் ராஜேஷுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். ராஜேசுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது. போலீஸ் காவலில் உள்ள அவரிடம் புலனாய்வு துறையினர் மற்றும் சிறப்பு படை பிரிவினரும் விசாரித்து வருகின்றனர். குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து ரெயிலில் டெல்லிக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜேஷுடன் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சாட்டிங் வழியே தொடர்புடைய 10 பேரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் 5 பேரின் விவரங்கள் ராஜேஷின் மொபைல் போனில் இருந்த தகவல்களை கொண்டு எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த சூழலில், டெல்லி முதல்-மந்திரி தாக்குதலில் தொடர்புடைய ராஜேஷின் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ராஜேஷுக்கு பணபரிமாற்றம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். ரூ.2 ஆயிரம் பணபரிமாற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் தஹ்சீன் சையது என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். குஜராத்தின் ராஜ்கோட் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






