டெல்லியில் அமைதி பேரணி; பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்

டெல்லியில் அமைதி பேரணி சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.
படம்: ANI
படம்: ANI
Published on

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக மாறியது.

இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் வீடு திரும்பி விட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறைக்கு மத்திய அரசு மற்றும் உள்துறை பொறுப்பேற்க வேண்டும். வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும். மக்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகின்றனர் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறினார்.

இந்நிலையில், காந்தி ஸ்மிரிதி பகுதியை நோக்கி காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அமைதி பேரணி சென்றனர். எனினும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ஜன்பாத் சாலையில் பேரணி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com