கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புகைக் குப்பிகளை வீசி பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டதாக மனோரஞ்சன் டி, சாகர் சர்மா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனோரஞ்சன் டி, சாகர் சர்மா ஆகிய இருவரும் நீண்டகாலமாக சிறையில் இருப்பதைக் குறிப்பிட்டும், இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியும் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி கிரண் பன்சால், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43டி(5)-ன் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் இந்த வழக்கிற்கும் பொருந்தும் என நீதிபதி குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டுகள் முதற்கட்ட விசாரணையில் உண்மையாக இருப்பதற்கு போதிய முகாந்திரங்கள் உள்ளதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல்கள் அமைந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீலம் ரவுலியா என்ற நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதனை முன்வைத்து இருவரும் ஜாமீன் கோரியிருந்தனர்.
ஆனால், நீலம் ஆசாத் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே இருந்ததாகவும், மகேஷ் குமாவத் சம்பவத்தன்று டெல்லியிலேயே இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மாறாக, மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா இருவரும் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்ததாகவும், தங்களது காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளைப் பயன்படுத்தியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு தினமான டிசம்பர் 13-ஆம் தேதியைத் திட்டமிட்டு இந்தச் சம்பவத்துக்கு தேர்வு செய்ததாகவும், தங்களது செல்போன்களில் இருந்த தகவல்களை அழித்து, அவற்றை மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான லலித் ஜாவிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை தாமதமாவதை மட்டும் காரணமாகக் கொண்டு ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.