டெல்லி அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவிப்பு

டெல்லியில் மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவித்து உள்ளார்.
டெல்லி அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசின் அதிகார குறைப்பு அவசர கட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கடந்த மே 23-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவசர சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார்.

டெல்லியில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது, இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த மே மாதம் 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

எனினும், இந்த விவகாரத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

இதற்கு எதிராக பல்வேறு மாநில தலைவர்களை சந்திக்க கெஜ்ரிவால் முடிவு செய்து, அதன்படி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு கடந்த மே 23-ந்தேதி சென்று, அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும் சென்றிருந்தனர்.

தொடர்ந்து, முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளார்.

இதனை அடுத்து, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவை லக்னோ நகரில், கெஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து வரும்போது, நாடாளுமன்ற மேலவையில் இந்த அவசர சட்டம் தோற்கடிக்கப்படும். 2024-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு மோடி வரமுடியாது என்ற ஒரு வலிமையான செய்தியும் தெரிவிக்கப்படும்.

நாடாளுமன்ற மேலவையில் எங்களுக்கு அவரது கட்சி ஆதரவளிக்கும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்ததற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com