டெல்லி தீ விபத்து; உயிரை பணயம் வைத்து பலரை காப்பாற்றிய ஹீரோக்கள்

டெல்லியில் 4 அடுக்கு கட்டிட தீ விபத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை தங்களது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஹீரோக்களின் பேட்டியை காணலாம்.
Image Courtesy: indiatoday
Image Courtesy: indiatoday
Published on

புதுடெல்லி,

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, மளமளவென தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி, புகை மண்டலம் போல் காட்சியளித்தது.

இந்த தீ விபத்தில் சிக்கி மொத்தம் 27 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 50 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என இழப்பீடு அறிவித்து உள்ளார்.

டெல்லி தீ விபத்தில் கட்டிட உரிமையாளர்களான வருண் கோயல் மற்றும் சதீஷ் கோயல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தீ விபத்தின்போது, தங்களுடைய உயிரை பணயம் வைத்து தீயில் சிக்கி கொண்ட பலரை காப்பாற்றிய ஹீரோக்களை பற்றி தெரிய வந்துள்ளது. அவர்களை காண்போம்.

இந்த தொழிற்சாலையில் 8 நாட்களுக்கு முன் மம்தா தேவி (வயது 52) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரது கணவர் மாற்றுத்திறனாளி. அதனால், தனது 2 குழந்தைகள் உள்பட குடும்ப சுமையை ஏற்கும் பொறுப்பு தேவியிடமே வந்தது.

இந்த சம்பவம் பற்றி தேவி கூறும்போது, தீ விபத்து ஏற்பட்டவுடன் ஒரே கூச்சலாக இருந்தது. மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள தப்பியோடினர். அறையின் வெப்பநிலை திடீரென உயர்ந்தது. இதில் பலர் மயங்கி விழுந்தனர் என கூறுகிறார்.

இதன்பின்னர் ஜன்னல் பக்கத்தில் கிரேன் ஒன்று வந்தது. மீட்பு குழுவினரும் வந்தனர். ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. தன்னை காப்பாற்றுவதற்கு முன் சிறுமிகளின் உயிரை காப்பாற்ற வேண்டியது அவசியம் என நினைத்து, அவர்களை முதலில் கயிறு வழியே கீழே இறக்கி விட்டுள்ளார்.

வேறு சிறுமிகள் யாரும் இல்லை என உறுதி செய்து விட்டு கடைசியாக அவர் கீழே இறங்கியுள்ளார். தேவிக்கு கைகளிலும், கால்களிலும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபோன்று 6 சிறுமிகளை அவர் வெளியேற்றி உள்ளார்.

இதேபோன்று அந்த தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வரும் அவினாஷ் (வயது 27) கூறும்போது, ஜன்னலை உடைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை கிரேன் வழியே கீழே கொண்டு செல்ல உதவினேன். யாரும் இல்லை என உறுதி செய்த பின்னர் கீழே சென்றேன் என கூறியுள்ளார்.

முதலில் என்ன நடந்தது என யாருக்கும் எதுவும் தெரியவில்லை. திடீரென அறையில் வெப்பம் அதிகரித்து, புகை பரவியது. இதன் பின்னர் நிலைமையை உணர்ந்து கொண்டு, ஜன்னல் கண்ணாடிகளை உடன் இருந்தவர்களுடன் சேர்ந்து உடைத்தோம்.

அரை மணிநேர போராட்டத்திற்கு பின்பு மேஜை, நாற்காலிகள் உதவியுடன் ஜன்னலை உடைத்தோம். எங்களை முதலில் போக விடுங்கள் என பெண்கள் தொடர்ந்து கேட்டனர்.

வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என அவர்கள் கூறினர். அவர்களது வீட்டில் வேலை பார்க்கும் ஒரே நபர் தாங்கள்தான் என்றும் கூறினர். இதுபோன்ற சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் முதலில் காப்பாற்ற வேண்டும் என நினைத்து அதற்கேற்ப செயல்பட்டேன் என அவினாஷ் கூறுகிறார்.

அறையில் வெப்பம் அதிகரித்து சிலர் உயிரிழந்து கிடந்தனர். அவர்களுடன் வேறு சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களை வினீத் குமார் என்பவர் காப்பாற்றி உள்ளார்.

வினீத் கூறும்போது, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தின் அறைகளில் நடந்த காட்சிகளை பார்க்கும்போது மனது வலித்தது. பலர் சுயநினைவற்று தரையில் கிடந்தனர். சிலர் தங்களை காப்பாற்றி கொள்ள மாடிப்படிகளில் ஏறி ஓடினர்.

ஆனால், சுயநினைவற்று, மயங்கி கிடந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதனால், மற்றவர்கள் செய்த உதவியுடன் 12க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி உள்ளேன் என வினீத் கூறுகிறார்.

அந்த பகுதியில் இருந்து பாதுகாப்புக்கு தப்பி ஓட வேண்டும் என நினைத்தேன். ஆனால், தீயின் பிடியில் சிக்கி அலறிய மக்களின் அலறலை கேட்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நிலக்கரி அடுப்பின் மீது நிற்பது போல் தோன்றியது. அனைத்து பக்கங்களிலும் புகையே காணப்பட்டது என வினீத் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com