தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜர்வாலுக்கு ஜாமீன்

டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜர்வாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #CSassaultcase #AAPSlapgate
தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜர்வாலுக்கு ஜாமீன்
Published on

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானதுல்லா கான் ஆகியோர் தன்னை தாக்கியதாக தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் புகார் அளித்தார். மாநில அரசின் உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியே இத்தகையை குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னை தாக்கிய எம்.எல்.ஏக்கள் மீது தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் ஆளுநரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் கைது செய்தனர்.டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்தததையடுத்து, இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், எம்.எல்.ஏ பிரகாஷ் ஜர்வாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதே வழக்கில் கைதான மற்றொரு எம்.எல்.ஏவான அமானதுல்லா கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முன்னதாக, இரு எம்.எல்.ஏக்களுக்கும் ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com