எதிர்க்கட்சி கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைப்பதா? தடை கோரும் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு

எதிர்க்கட்சி கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்திருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் மனுவுக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைப்பதா? தடை கோரும் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு
Published on

தடை கோரி மனு

பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி கிரிஷ் பரத்வாஜ் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

முரண்படும் தோற்றம்

அதில், 'நம் நாட்டின் பெயரை தங்கள் கூட்டணிக்கு சூட்டியதன் மூலம், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், பா.ஜ.க.வும், பிரதமர் நரேந்திர மோடியும் சொந்த நாட்டுக்கு எதிராக முரண்படுவது போன்ற தோற்றத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தியுள்ளார். மேலும் சாதாரண மக்கள் மத்தியிலும் இது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.இதன் மூலம், நாட்டின் பெயரால் தங்களுக்கு ஒரு நியாயமற்ற சாதகத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ள முயன்றுள்ளன.

தடை விதிக்க வேண்டும்

நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் நான் ஐகோர்ட்டை நாடியுள்ளேன். 'இந்தியா' என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பதில் அளிக்க உத்தரவு

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி அமித் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரம் தொடர்பாக எதிர்த்தரப்பினரின் கருத்து கேட்கப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே மத்திய உள்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகங்கள், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் 26 எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்' என்று நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com