நாட்டின் கொரோனா தலைநகராக டெல்லி மாறி வருகிறது; டெல்லி உயர் நீதிமன்றம்

நாட்டின் கொரோனா தலைநகராக டெல்லி மாறி வருகிறது என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
நாட்டின் கொரோனா தலைநகராக டெல்லி மாறி வருகிறது; டெல்லி உயர் நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக குறைந்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது. இதற்கு முதல் மந்திரி கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்து உள்ளதுடன், பண்டிகை நாட்களை கவனமுடன் கொண்டாடும்படி அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியிலுள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், எங்களுக்கு 4 மாதங்களுக்கும் கூடுதலாக சம்பளம் வழங்கப்படவில்லை என வருத்தமுடன் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் நாங்கள் மேயரிடம் சம்பள விவகாரம் பற்றி முறையிட்டோம். ஆனால் அதற்கு அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என கூறி விட்டார் என வருத்தமுடன் கூறினார்.

இதுபற்றிய மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுடன் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படாமல் இருக்கும் சம்பளம் பற்றிய மனு மீது இன்று விசாரணை நடந்தது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு விசாரணைளை இன்று மேற்கொண்டது.

இதில் நீதிபதிகள் கூறும்பொழுது, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி அரசு ஆகியவை நிதி அல்லது சம்பளம் விடுவிப்பு பற்றிய புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற டிசம்பர் 16-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள், நாட்டின் கொரோனா தலைநகராக டெல்லி விரைவில் மாற போகிறது. இதற்கு அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கைகளே காரணம். இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்த போகிறோம் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com