

புதுடெல்லி,
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைநகரில் 500 புதிய மின்சார பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் கொடியசைத்து மின்சார பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.
இதனால், டெல்லியில் செயல்பாட்டில் உள்ள மொத்த மின்சார பஸ்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 286 ஆக உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து, இதுவரை முதல் இடத்தில் இருந்த மராட்டிய மாநிலம் (4,001 மின்சார பஸ்கள்) பின்னுக்கு தள்ளப்பட்டு, நாட்டிலேயே எண்ணிக்கையில் அதிக மின்சார பஸ்களை கொண்ட மாநிலம் என டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளது.
இந்த மின்சார பஸ் எண்ணிக்கையில் மராட்டியத்திற்கு அடுத்து கர்நாடகா (1,989), குஜராத் (1,041), தெலுங்கானா (875) மற்றும் உத்தர பிரதேசம் (874) ஆகியவை உள்ளன.
டெல்லியில், 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்த பா.ஜ.க., கடந்த ஆண்டு இதே நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலாம் ஆண்டு தின கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில், டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி அரசில் மந்திரிகளாக உள்ள பிரவேஷ் சாகிப் சிங் ஆஷிஷ் சூட், டாக்டர் பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்திரஜ், கபில் மிஷ்ரா, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, இந்த வெற்றியானது, நவீனமயமாக்கல், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றுதல் மற்றும் அனைவரும் அணுக கூடிய வகையில் பொது போக்குவரத்தை மாற்றுதல் ஆகிய டெல்லி அரசின் தொலைநோக்கு கொள்கையால் ஏற்பட்டவையாகும் என கூறினார்.