டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பா.ஜ.க.தான் காரணம் - சஞ்சய் சிங் பரபரப்பு பேட்டி

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பா.ஜ.க.தான் காரணம் - சஞ்சய் சிங் பரபரப்பு பேட்டி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறன்றன. இந்த வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரியாக இருந்த மனிஷ் சிசோடியா, எம்.பி சஞ்சய் சிங், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது கைதாகி சிறையில் அடைக்கபட்டனர்.

இதையடுத்து, டெல்லி எம்.பி சஞ்சய் சிங், தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, சஞ்சய் சிங்கிற்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்தது. மேலும், இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் இன்று சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பா.ஜ.க.தான் காரணம். இந்த சதியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பங்கு உள்ளது.

மகுண்டா ரெட்டி என்ற நபர் 3 முறையும், அவரது மகன் ராகவ் மகுண்டா 7 முறையும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவாலை தெரியுமா என மகுண்டா ரெட்டியிடம் அமலாக்கத்துறை கேட்டபேது, அவர் உண்மையை சொன்னார். ஆனால் அதன் பிறகு, அவரது மகன் ராகவ் மகுண்டா கைது செய்யப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர் தனது வாக்குமூலத்தை மாற்றி அளித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 10 முதல் ஜூலை 16 வரை, ராகவ் மகுண்டாவிடம் பெறப்பட்ட 7 வாக்குமூலத்தில் ஆறில், அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஜூலை 16ம் தேதி பெறப்பட்ட 7வது வாக்குமூலத்தில், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறினார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். 5 மாத சித்திரவதைக்கு பிறகு, அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சுனிதா கெஜ்ரிவால் இருக்கும் புகைப்படம் பின்புறத்தில் அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்களுக்கு நடுவில் கெஜ்ரிவால் படமும் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் சிங்,"தலைவர்கள் புகைப்படத்துடன் நம் புகைப்படத்தை வைப்பதால் அவர்களைப்பேல் நாமும் பெரியவர்கள் என்பது கிடையாது. அவ்வாறு செய்வதானது, நாம் அவர்களால் வசீகரிக்கப்பட்டுள்ளேம் என்பதே அர்த்தம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com