டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: கோர்ட்டு உத்தரவு

நீதிமன்ற காவலில் தன்னுடன் சில மதம் சார்ந்த மற்றும் ஆன்மீக புத்தகங்களை கொண்டு செல்ல அனுமதிக்கும்படி சிசோடியா கோர்ட்டில் கேட்டு உள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவின் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் அவரிடம் நேரடி விசாரணை நடந்தது.

விசாரணை முடிவில், சிசோடியாவை அன்றிரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் மார்ச் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக மார்ச் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிசோடியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிசோடியாவுக்கு 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்படி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி விசாரணை நடத்தினர். அதற்கு இரு நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

திகார் சிறையில் வைத்தே கடந்த 9-ந்தேதி சிசோடியாவை அமலாக்க துறை கைது செய்தது. அவர் 22-ந்தேதி (இன்று) வரை அமலாக்க துறையின் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமலாக்க துறையின் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள சூழலில், டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் சிசோடியா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில், அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சிசோடியா, இந்த வழக்கில் விசாரணையை முடக்கும் வகையில், பெரிய அளவில் டிஜிட்டல் சான்றுகளை அழிக்கும் முயற்சியில் தொடர்புடையவராக உள்ளார். 14 மொபைல் போன்களை மாற்றியும், அவற்றை அழித்தும் உள்ளார் என அமலாக்க துறை குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

கோர்ட்டில், நீதிமன்ற காவலில் தன்னுடன் சில மதம் சார்ந்த மற்றும் ஆன்மீக புத்தகங்களை கொண்டு செல்ல அனுமதிக்கும்படி சிசோடியா கேட்டு உள்ளார். இதுபற்றி தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் கேட்டு உள்ளது. அதன்பின்னர் அதற்கு அனுமதி அளிப்போம் என்றும் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, சி.பி.ஐ. அதிகாரிகள் கோரிக்கையின்படி, சிசோடியாவின் நீதிமன்ற காவலை 14 நாட்களுக்கு நீட்டித்து ரோஸ் அவென்யூ கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதன்படி, சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் பிறப்பித்த உத்தரவில், சிசோடியாவுக்கு வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com