டெல்லி மதுபான கொள்கை ஊழல்; சிசோடியாவை தொடர்ந்து கவிதா விரைவில் கைது: பா.ஜ.க.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியாவை தொடர்ந்து கவிதா விரைவில் கைது செய்யப்படுவார் என பா.ஜ.க. கூறியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல்; சிசோடியாவை தொடர்ந்து கவிதா விரைவில் கைது: பா.ஜ.க.
Published on

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனை பழிவாங்கும் நடவடிக்கை என கெஜ்ரிவால் சாடினார். இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை.

இந்த நிலையில், கடந்த 19-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களை பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகளை முன்னிட்டு நேரில் ஆஜராக கால அவகாசம் வேண்டுமென சிசோடியா கேட்டிருந்தார்.

இதனால், விசாரணைக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிசோடியாவுக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், மணிஷ் சிசோடியா நேற்று காலை தனது இல்லத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணிநேரம் நேற்று நடந்த விசாரணைக்கு பின்னர் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

சிசோடியா கைது பற்றி சி.பி.ஐ. தரப்பில் வெளியான அறிக்கையில், மதுபான ஊழல் வழக்கு விசாரணையின்போது, சிசோடியா தப்பிக்க கூடிய வகையிலான பதில்களை வழங்கினார். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. சான்றுகளுடன் அவரை எதிர்கொண்டபோதும் முரணாகவே பதில்களை அளித்து உள்ளார். அதனால், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் விவேக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் நிறைய பேர் கைது செய்யப்படும் சாத்தியம் உள்ளது. கவிதா விரைவில் கைது செய்யப்படுவார் என கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியினர், பஞ்சாப் மற்றும் குஜராத் தேர்தலுக்கு நிதி வேண்டி கவிதாவிடம் டீல் பேசி உள்ளனர். இதில், ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.150 கோடி கொடுத்து உள்ளார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் உள்ளார். இவரது மகள் கவிதா. பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி.யாக உள்ளார். டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்த வழக்கில் கவிதாவின் பெயரும் அடிபட்டு வருகிறது.

இதற்கு முன், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கவிதாவின் பெயரும் இடம் பெற்று உள்ளது. அவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றில் 65 சதவீத பங்கு உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சியில் ஊழல் நிறைந்து உள்ளது என குற்றச்சாட்டு கூறியுள்ள விவேக், அக்கட்சி தனது இருப்பை இழக்கும் என்றும் கூறியுள்ளார்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தொடங்கியபோது, அக்கட்சிக்கு நிதி எதுவுமில்லை. ஆனால், நாட்டில் மற்ற அனைத்து கட்சிகளையும் விட அதிக சேமிப்பு நிதியை கொண்டு உள்ளது என விவேக் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com