2 நாள் அரசுமுறைப்பயணமாக இலங்கை புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி இலங்கை புறப்பட்டு சென்றார். இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 நாள் அரசுமுறைப்பயணமாக இலங்கை புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
Published on

புதுடெல்லி,

புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் வெசாக் (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது.

இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் கொழும்பு நகருக்கு புறப்பட்டுச்சென்றார். கொழும்பு விமான நிலையம் சென்றடைந்ததும் பிரதமர் மோடியை அந்நாட்டு தலைவர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

முன்னதாக இன்று காலை தனது இலங்கை பயணம் குறித்து டுவிட்டரில் தமிழில் பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியும் அவர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com