டெல்லி பேரணி: விவசாயிகளுக்கு தேநீர் வழங்கும் பணியில் குருத்வாரா தன்னார்வலர்கள்

டெல்லியில் விவசாயிகளுக்கு தேநீர் வழங்கும் பணியில் குருத்வாரா தன்னார்வலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லி பேரணி: விவசாயிகளுக்கு தேநீர் வழங்கும் பணியில் குருத்வாரா தன்னார்வலர்கள்
Published on

புதுடெல்லி,

விவசாயிகள் நலனுக்கான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடிக்கிறது.

டெல்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று அரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் பேரணியில் கொரோனா பரவல் ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவ பரிசோதனைகளுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நன்மைக்காக பேரணியாக சென்ற டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இந்த பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. இதனால், பெருமளவில் பயணிகள் நடுவழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டம் எதிரொலியாக கடந்த 1ந்தேதி சிங்கு எல்லை பகுதி மூடப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டது. பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டன.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இதில் 35க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே இன்று 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதனை முன்னிட்டு மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள், அதற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பதில் போன்றவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து, விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காலையில் புத்துணர்வுடன் இருப்பதற்காக அவர்களுக்கு தேநீர் வழங்கப்படுகிறது. இதற்காக உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள குருத்வாராவை சேர்ந்த தன்னார்வலர்கள், டெல்லி-காசியாபாத் எல்லையில் திரண்டிருக்கும் விவசாயிகளுக்கு தேநீர் வினியோகித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com