டெல்லி பேரணியில் விதிமீறல்: 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்

டெல்லியில் போராட்ட பாதை ஒப்பந்த மீறலில் ஈடுபட்டதற்காக சன்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தலைவருக்கு விளக்கம் கேட்டு டெல்லி துணை காவல் ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி பேரணியில் விதிமீறல்: 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்
Published on

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

இதனைத்தொடர்ந்து போலீசார் தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார். போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு கூறின.

எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர்.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு சில பகுதிகளில் இன்டர்நெட் சேவையை முடக்கி மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

டெல்லி பேரணியில் போலீசார் அளித்த அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் அவர்களை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் வெளியானது.

இதன்பின் டெல்லி போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.

கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், டெல்லி போலீசின் துணை ஆணையாளர் சின்மொய் பிஸ்வால், சன்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினை சேர்ந்த தர்சன் பால் என்பவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட பாதைகளில் செல்ல டெல்லி போலீசார் வழங்கிய அனுமதிக்கான ஒப்பந்தம் மீறப்பட்டு உள்ளது.

இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காக உங்கள் மீதும் மற்றும் உங்களுடைய கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டு அதற்கு அடுத்த 3 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கும்படி கேட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், திக்ரி எல்லை (74 கி.மீ.), சிங்கு எல்லை (63 கி.மீ.) மற்றும் காஜிப்பூர் எல்லை (68 கி.மீ.) ஆகிய 3 அனுமதிக்கப்பட்ட பகுதிகள் வழியே டிராக்டர் பேரணி நடத்த நீங்களும் மற்றும் பிற விவசாய அமைப்புகளும் ஒப்பு கொண்டீர்கள்.

அனைத்து விவசாய அமைப்புகளும் ஒப்பு கொண்ட அதற்கான விதிமுறைகளில் நீங்கள் கையெழுத்திட்டீர்கள். அந்த ஒப்பந்தத்தில், அமையுடன் பேரணி நடத்தி முடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பேரணி, ராஜபாதை நிகழ்ச்சி நிறைவுக்கு பின்னர் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். பேரணியில் சன்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பினை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அணிவகுத்து வழிநடத்தி செல்வர்.

இந்த டிராக்டர் பேரணியில் மொத்தம் 5 ஆயிரம் டிராக்டர்கள் பங்கேற்கும். ஆயுதங்களோ, வெடிபொருட்களா அல்லது வேறு வகையான ஆயுதங்களோ கொண்டு செல்ல கூடாது போன்றவையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

ஆனால் இவற்றுக்கு மாறாக, அதிக எண்ணிக்கையில் டிராக்டர்கள், குடியரசு தினத்தில் சமூக விரோதிகளால் தூண்டி விடப்படும் வகையிலான பேச்சுகள், முந்தின நாள் இரவே எல்லைகளில் டிராக்டர்கள் குவிக்கப்பட்டது உள்பட பல்வேறு ஒப்பந்த மீறல்கள் நடந்துள்ளன என தெரிவித்து உள்ளார்.

இவற்றில் வன்மையாக கண்டிக்கத்தக்க வகையில், இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தேசிய நினைவு சின்னம் செங்கோட்டை மீது ஏறி சேதப்படுத்தியதுடன், மத கொடியை அங்கு வைத்துள்ளனர். பல்வேறு விவசாய அமைப்புகளின் கொடிகளும் செங்கோட்டை வளாக பகுதிகளில் இருந்து கிடைத்துள்ளன. இந்த தேச விரோத செயலுக்கு உரிய பதிலளிக்கும்படி பிஸ்வால் கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com