டெல்லி வன்முறை; உளவு பிரிவு அதிகாரி படுகொலை வழக்கில் கூடுதலாக 5 பேர் கைது

டெல்லி வன்முறையில் உளவு பிரிவு அதிகாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுதலாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி வன்முறை; உளவு பிரிவு அதிகாரி படுகொலை வழக்கில் கூடுதலாக 5 பேர் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லியின் வடகிழக்கே, குடியுரிமை திருத்த சட்டத்தின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். அவர்கள் கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். வன்முறையை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்திருந்தது.

இதேபோன்று வன்முறைக்கு போலீஸ் ஏட்டு ரத்தன் லால் மற்றும் டெல்லி சந்த்பாக் பகுதியில் வசித்து வந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா (வயது 26) ஆகியோரும் பலியாகினர். அங்கித் சர்மாவை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், அங்குள்ள கழிவுநீர் கால்வாய் ஒன்றில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சல்மான் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சந்த்பாக் பகுதியை சேர்ந்த பெரோஸ், ஜாவித், குல்பாம் மற்றும் சோயப் மற்றும் முஸ்தபாபாத் பகுதியை சேர்ந்த அனாஸ் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com