எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
Published on

அதிகார மோதல்

டெல்லியில் முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. டெல்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் யாருக்கு என்பதில் இந்த மோதல் முற்றியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அரசு அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் டெல்லி அரசுக்கே இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

டெல்லி நிர்வாக மசோதா

அந்த தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும்வகையில், கடந்த மே மாதம் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. டெல்லி அரசின் குரூப்-4 அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த இறுதி அதிகாரம், கவர்னருக்கே இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அவசர சட்டத்துக்கு மாற்றாக டெல்லி நிர்வாக மசோதாவை மத்திய அரசு இயற்றியது. இந்த மசோதாவை கடந்த 1-ந் தேதி மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி ஒப்புதல்

அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 3-ந் தேதி மக்களவையிலும், 7-ந் தேதி மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேறியது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் டெல்லி நிர்வாக மசோதா சட்டமாகி உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 2 மசோதாக்கள்

இதுதவிர டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவுக்கும் ஜனாதிபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா கடந்த 7-ந்தேதி மக்களவையிலும், 9-ந்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தனிநபர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் இந்த மசோதாவுக்கு தற்போது ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

பிறப்பு-இறப்பு பதிவு

அதே போல் கல்வி நிறுவனங்கள், அரசு பணிகளில் சேருவது முதல், ஓட்டுனர் உரிமம், ஆதா, திருமண பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் வரையிலான அனைத்து விதமான பணிகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாக பயன்படுத்த வகை செய்யும் பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கினார்.

4 மசோதாக்களுக்கு ஒப்புதல்

இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்ட திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதா ஆகிய 4 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com