டெல்லி போராட்டம்: உயிரிழந்த விவசாயிகளுக்கு பேரணியாக சென்று பிற விவசாயிகள் அஞ்சலி

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொடிகளை சுமந்தபடி பிற விவசாயிகள் பேரணியாக சென்றனர்.
டெல்லி போராட்டம்: உயிரிழந்த விவசாயிகளுக்கு பேரணியாக சென்று பிற விவசாயிகள் அஞ்சலி
Published on

புதுடெல்லி,

விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26ந்தேதி, டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் தங்களுடைய டிராக்டர்களில் அணிவகுத்து சென்று டெல்லியை அடைந்தனர். போராட்ட நிகழ்வை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நடந்த பலசுற்று பேச்சுவார்த்தை பலனற்று தோல்வியில் முடிந்தது.

இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறை போன்றவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. எனினும், அவற்றை ஏற்க மறுத்து விவசாயிகளின் போராட்டம் இன்று 25வது நாளை எட்டியுள்ளது.

டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சில விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொடிகளை சுமந்தபடி பிற விவசாயிகள் சிங்கு எல்லையில் பேரணியாக சென்றனர்.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்பொழுது, டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அஞ்சலி செலுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

ஜார்க்கண்டிலும் ராஞ்சி நகரில் அஞ்சலி செலுத்தும் வகையில் விவசாய குழுக்கள் பேரணியாக சென்றனர். இதேபோன்று பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் கிசான் மஜ்தூர் சங்க கமிட்டியின் உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com