

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மெஹ்ராலி காவல் நிலையத்தில் நபர் ஒருவர், தனது சகோதரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும், சகோதரியில் தொலைபேசி எண்ணிலிருந்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் அழைப்புகள் வருவதாக கூறி புகார் அளித்தார்.
மேலும், கடத்தல்காரர்கள் தனது சகோதரியை கட்டி வைக்கப்பட்டு இருந்த புகைப்படத்தை தனக்கு அனுப்பியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று, அப்பெண் வீட்டை விட்டு கடைசியாக சென்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பெண்ணின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனினும், மொபைல் எண் வாட்ஸ் அப்பில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனை பயன்படுத்தி தொழில்நுட்ப உதவியின் மூலம், தொலைபேசி ஆக்ராவில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து ஒரு போலீஸ் குழு ஆக்ராவுக்குச் சென்று, மொபைல் இருக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 50 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் மார்க்கெட்டில் உள்ள ஒரு ஹோட்டலை சோதனை செய்தபோது, அப்பெண்ணைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் அப்பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நிதி நெருக்கடியின் காரணமாக தனது சகோதரனிடம் இருந்து பணம் பறிப்பதற்காக இவ்வாறு கடத்தல் நாடகமாடியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னை தானே கைகளை கட்டிக்கொண்டு, ஒரு செயலியின் மூலம் தன் குரலை ஆண் குரலாக மாற்றி சகோதரனை மிரட்டி பணம் கேட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து அந்த பெண் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு மிரட்டி பணம் பறித்ததற்காக தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.