ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் காவல் 27-ந் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை 27-ந் தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் காவல் 27-ந் தேதி வரை நீட்டிப்பு
Published on

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை நவம்பர் 13-ந் தேதி வரை (நேற்று) நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு கடந்த 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வந்தார்.

நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதில் விசாரணை தொடங்கியதும் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகிற 27-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com