

திருவனந்தபுரம்,
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு உள்ளது. நோய் பரவலும் குறைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா 2வது அலையில் ஆபத்து நிறைந்த டெல்டா வகை கொரோனா கேரளாவில் அதிகம் பரவியிருந்தது. தற்போது தொற்று குறைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பினராயி விஜயன் பேசும்பொழுது, ஊரடங்கு நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் அதிக பலன் அளித்தது. மற்ற பகுதிகளை விட உயிரிழப்பு எண்ணிக்கையை குறைப்பதில் கேரளா சிறந்த வழியை மேற்கொண்டது. எனினும், முழு தளர்வு அளிக்க ஏற்ற வகையில் சூழல் இல்லை என கூறியுள்ளார்.
கேரளாவில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மக்கள் வீட்டிலும், வெளியேயும் கொரோனா விதிகளை உறுதியாக பின்பற்றும்படி கேட்டு கொண்டார்.
கடந்த 3 நாட்களாக தொற்று விகிதம் 13.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனை 10 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இலக்குடன் அரசானது செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.