கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்த ‘டெல்டா’ வகையே காரணம்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்த ‘டெல்டா’ வகையே காரணம்: ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கொரோனா வைரசின் உருமாறிய புதிய வகையான டெல்டா (பி.1.617.2) வகையே காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகையை விட டெல்டா வகை கொரோனா 50 சதவிகிதம் வேகமாக பரவக்கூடியது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் 12,200-க்கும் மேற்பட்ட திரிபுகள் பரவியிருப்பதாகவும் எனினும், டெல்டா வகையோடு ஒப்பிடும் போது இவற்றின் பரவல் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளதாகவும் டெல்லி, ஆந்திரா, குஜராத், மராட்டியம், ஒடிசா, தெலுங்கானாவில் அதிக அளவில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் டெல்டா வகை பாதிப்பு என்பது பெரிய அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி போட்ட பிறகு அல்ஃபா வகை பாதிப்பு ஏற்படவில்லை என்று ஆய்வு கூறியுள்ளது. எனினும், தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் உயிரிழப்புகளில் டெல்டா வகை திரிபுகளின் பங்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய SARS COV2 ஜெனோமிக் கூட்டமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com