

புதுச்சேரி,
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடந்து வருகிறது.
அரசின் கொள்கை முடிவுகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒத்துழைப்பதில்லை. அமைச்சரவை முடிவுகளை மாற்றி உத்தரவிடுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், அரசுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படும் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நேற்று காலை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். போராட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடியை பிரதமர் மோடி திரும்பப்பெற வலியுறுத்தி நாம் இந்த போராட்டத்தை நடத்து கிறோம். ஆனால் ராணுவத்தை கொண்டு வந்து நம்மை மிரட்டி விரட்டியடிக்க நினைக்கிறார்கள். அமைச்சரவையின் 51 முடிவுகளை கிடப்பில் போட்டுவிட்டு மக்கள் மத்தியில் அரசின் பெயருக்கு களங்கம் கற்பிக்க பார்க்கிறார். இதனால் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். மோடியும், கிரண்பெடியும் இணைந்து புதுவை அதிகாரத்தை பறிக்கும் வேலையினை செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்துவது நமது கடமை. அதற்காகத்தான் இந்த போராட்டம்.
மக்களின் அதிகாரத்தை பறித்தால் மோடியானலும், பெடியானாலும் உயிர்த்தியாகம் செய்தாவது மக்களை காப்போம். நமக்கு மக்கள் நலன்தான் முக்கியம். மழை, வெயில், புயல், பீரங்கி என எது வந்தாலும் அதை சந்திப்போம். எதையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆனால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கூட்டணி கட்சியான தி.மு.க. தவிர்த்து விட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். போராட்டம் நடந்த இடத்தில் துணை ராணுவப்படையினரும், உள்ளூர் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.