ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி உறுதி

ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.
ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி உறுதி
Published on

பெங்களூரு:

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள், தனியார் பஸ்கள், டாக்சிகள் நேற்று பெங்களூருவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன் டிரைவர்கள் சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் மத்தியில் போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி பேசியதாவது:-

தனியார் வாடகை வாகன டிரைவர்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்ற நான் உறுதி அளித்துள்ளேன். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற காலஅவகாசம் தேவைப்படுகிறது. தனியார் வாகன ஓட்டுனர்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். ரேபிடோ பைக் டக்சியை அரசின் அனுமதி இல்லாமல் இயக்குகிறார்கள். அவற்றுக்கு தடை விதிக்கப்படும். ஆட்டோ-வாடகை கார்களை இயக்க அரசே ஒரு செயலியை உருவாக்கி அதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் வாடகை வாகனங்களின் டிரைவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் டிரைவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் வாடகை வாகன போக்குவரத்து மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும். வீட்டு வசதி திட்டம் அமல்படுத்தப்படும். சட்டவிரோதமான முறையில் சரக்கு வாகனங்களை ஓட்டினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிலையத்தில் இந்திரா உணவகம் திறக்கப்படும். ஒரு நகரம், ஒரு கட்டணம் முறை அமல்படுத்தப்படும். டிரைவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை வழங்க ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராமலிங்கரெட்டி பேசினார்.

தனியார் வாடகை வாகன டிரைவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நடராஜ் சர்மா கூறுகையில், "நாங்கள் முன்வைத்த 32 கோரிக்கைகளில் 27 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மந்திரி ராமலிங்கரெட்டி உறுதியளித்துள்ளார். அதனால் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். ஒருவேளை அரசு தனது வாக்குறுதிப்படி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com