2014ல் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது - ராகுல் காந்தி

அரசியல், பொருளாதார அமைப்புகள் சிதைவடையும்போது தான் பாசிச சக்திகள் தலைதூக்குகின்றன என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

2014ல் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது
Published on: 

ஐதராபாத்,

இந்தியாவில் 2014ம் ஆண்டிலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற பாரத் உச்சி மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் 2014ம் ஆண்டிலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது; மற்றவர்களின் கருத்துகளை கேட்காமல் கூச்சலிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

அரசியல், பொருளாதார அமைப்புகள் சிதைவடையும்போது தான் பாசிச சக்திகள் தலைதூக்குகின்றன. பாசிஸ்டுகள் எப்போதும் கத்திக்கொண்டே இருப்பார்கள். அலறுவார்கள். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்க மறுப்பார்கள். அதேசமயம், பெரும்பான்மையான மக்கள் செவிசாய்க்கிறார்கள், கவனிக்கிறார்கள், பணிவுடன் இருக்கிறார்கள். அதனால், பாசிஸ்டுகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது

2024ல் வாக்களித்த 14 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜக-ஆர்எஸ்எஸ் உங்களைக் கொத்தடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள். 24 மணி நேரமும் கடினமாக உழைக்க வேண்டும், காயமடைந்தாலோ, விபத்துகளில் உயிரிழக்க நேரிட்டாலோ அவர்களுக்குக் கவலை இல்லை.

ஆனால், அதன் பலன்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களுக்கோ, அம்பானி-அதானி போன்றவர்களுக்கோ அல்லது ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கோ கிடைக்க வேண்டும். ஆனால், உங்கள் கடின உழைப்பிற்கான பலன் உங்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று அவர்கள் உங்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.

டெலிவரி ஊழியர்களும், உழைப்பாளர்களும் நாட்டின் அடித்தளம், அவர்களைப் பங்குதாரராக மாற்றி, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் காங்கிரஸ் விரும்புகிறது.

தெலுங்கானா அரசு, ஹைதராபாத் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களில் டெலிவரி பணியாளர்கள் பணி நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக, வைஃபை வசதி கொண்ட பிரத்யேக ஓய்வு மண்டலங்களை அமைக்கவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X