மத்திய மந்திரி நாராயண் ரானே பங்களாவை இடிக்கும் பணி தொடக்கம்

சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத்திய மந்திரி நாராயண் ரானே பங்களாவை இடிக்கும் பணி தொடங்கியது
மத்திய மந்திரி நாராயண் ரானே பங்களாவை இடிக்கும் பணி தொடக்கம்
Published on

மும்பை

மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மந்திரி நாராயண் ரானேக்கு சொந்தமான 8 மாடி 'ஆதிஷ்' பங்களா உள்ளது. இந்த வீடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் விதியை (சி.ஆர்.இசட்) மீறியும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டுமான பரப்பளவில் (எப்.எஸ்.ஐ). கட்டப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆட்சியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நாராயண் ரானே வீட்டில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி நாராயண் ரானே வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியது. அவர் மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு அவரது மனுவை கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. மேலும் நாராயண் ரானேயின் வீட்டில் சட்டவிரோத கட்டிட பகுதிகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது.

இதேபோல நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2 மாதங்களில் வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமான பகுதியை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு நாராயண் ரானேக்கு உத்தரவிட்டு இருந்தது. அவர் 2 மாதத்தில் அதை செய்ய தவறினால், சட்டவிரோத கட்டுமான பகுதிகளை மாநகராட்சி இடிக்கும்" என்றார்.

இந்தநிலையில் நாராயண் ரானே நேற்று அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமான பணிகளை இடிக்கும் பணிகளை தொடங்கி உள்ளார். இதற்கிடையே நாராயண் ரானே பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் இடிக்கும் பணி தொடங்கி இருப்பதை சமூக ஆர்வலர் சந்தோஷ் தாவுந்கர் வரவேற்று உள்ளார். அதே நேரத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதியை மீறியதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதி மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது இதைவிட மோசமாக இருக்கும் எனவும் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com