

புதுடெல்லி,
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் வன்முறை நடைபெற்ற டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் இன்று சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணியை டெல்லி நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் வன்முறை நடைபெற்ற ஓரிரு தினங்களிலேயே முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
அரசு ஆதரவுடன் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கமான நடவடிக்கையின் ஒருபகுதியாகவே ஜஹாங்கிர்புரி பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 11 ஆம் தேதியும் இதேபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அப்பகுதியில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.