

புதுடெல்லி,
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நவம்பர் 8ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, புல்லட் ரெயில் திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்து உள்ளார். ரூபாய் நோட்டு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட கொள்ளை; சட்டபூர்வ கொள்ளை' என விமர்சனம் செய்தார். அதனை மீண்டும் வலியுறுத்தி உள்ளார் மன்மோகன் சிங்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வணிகர்கள் மத்தியில் பேசிய மன்மோகன் சிங், ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு தினமாகும். உலகில் எந்த பகுதியிலும் ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற ஒரு நிர்பந்திக்கப்பட்ட நடவடிக்கையானது எடுக்கப்படவில்லை. பொருளாதார சீர்திருத்தம் என பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எடுத்த அனைத்து நடவடிக்கையும் சீனாவிற்கே உதவி செய்து உள்ளது, சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
சூரத், வாபி, மோர்பி மற்றும் குஜராத் மாநிலத்தின் பிற பகுதியில் உள்ள தொழில் துறைகள் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
குஜராத் போன்ற மாநிலங்களில் மத்திய அரசின் இந்நகர்வுகள் சிறிய தொழில்களை பெரிதும் பாதித்து உள்ளது, சிதைத்து உள்ளது.
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாட்டில் தொழில் அதிபர்கள் மத்தியில் வரிவிதிப்பு பயங்கரவாத உணர்வை ஏற்பட செய்து உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மிகவும் திட்டமிட்ட ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. அப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பை குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியே முழுமையாக எதிர்த்தார். இப்போது கொண்டு வரப்பட்டு உள்ள ஜிஎஸ்டி அப்படியே நாங்கள் வடிவமைத்ததில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. பலதரப்பட்ட மற்றும் கூடுதல் விதிப்பு முறைகள் ஜிஎஸ்டியில் இப்போது சேர்க்கப்பட்டு உள்ளது. மும்பை மற்றும் ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் பிரதமரின் தற்கர்வத்தின் நடவடிக்கையாகும் என்றார்.
புல்லட் ரெயில் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய மன்மோகன் சிங், கேள்வி எழுப்புபவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்களா? ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பினால் அவர்கள் வரி ஏய்ப்பு செய்தவர்களா? என கேள்வியையும் எழுப்பி உள்ளார். குஜராத் மாநில அரசை விமர்சனம் செய்த மன்மோகன் சிங், குஜராத் மாநில பா.ஜனதா அரசு வனப்பகுதியில் பழங்குடியினர் விவசாயம் செய்ய அனுமதிக்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வனப்பகுதியில் உள்ள இடங்களை விற்பனை செய்கிறது என குற்றம் சாட்டி உள்ளார்.