முதல் மந்திரியின் சகோதரர் சுயேட்சையாக போட்டி - பஞ்சாப் காங்கிரஸில் பரபரப்பு

பஞ்சாப் முதல் மந்திரியின் உடன் பிறந்த சகோதரர் மனோகர் சிங்கிற்கு சீட் கொடுக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.
முதல் மந்திரியின் சகோதரர் சுயேட்சையாக போட்டி - பஞ்சாப் காங்கிரஸில் பரபரப்பு
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தேர்வில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வந்தது. முதல் கட்டமாக 86 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்கவுர் சாஹிப் தொகுதியில் இருந்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. துணை முதல்வர்களான சிக்ஜிந்தர் சிங் ரந்தவா அவர்கள் தேரா பாபா நானக் தொகுதியில் இருந்தும், ஓம் பிரகாஷ் சோனி அவர்கள் அமிர்தசரஸ் மத்திய தொகுதியில் இருந்தும் போட்டியிடவுள்ளனர்.

பஞ்சாப் காங்கிரசில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் பஞ்சாப் முதல் மந்திரியின் உடன் பிறந்த சகோதரர் மனோகர் சிங்கிற்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால், கோபம் அடைந்த மனோகர் சிங் பாஸ்சி பதனா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். முதல் மந்திரியின் சகோதரரே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளது பஞ்சாப் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மனோகர் சிங் சுயேட்சையாக களம் இறங்கும் பாஸ்சி பதனா தொகுதியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவான குர்பீரித் சிங் மீண்டும் போட்டியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com