'கணவரை காதலிக்கிறேன்' - விவாகரத்தை ரத்து செய்யக்கோரி பெண் மனு; கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக கணவரை சந்தேகப்படுதல் கொடூர குற்றம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
'கணவரை காதலிக்கிறேன்' - விவாகரத்தை ரத்து செய்யக்கோரி பெண் மனு; கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான ஒராண்டில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2014 டிசம்பர் முதல் தம்பதி பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதையடுத்து விவாகரத்து வழங்கக்கோரி கணவர் புனே கோர்ட்டில் 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த புனே கோர்ட்டு, கணவருக்கு விவாகரத்து வழங்கியது.

இந்நிலையில், விவாகரத்து வழங்கப்பட்டதை எதிர்த்து அப்பெண் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில், எனது கணவரின் சகோதர, சகோதரிகள் என்னை துன்புறுத்தினர். ஆனால், என் கணவரை நான் இன்னும் காதலிக்கிறேன். எனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. கணவருடன் வழங்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை ஐகோர்ட்டு, மனுதாரரின் முன்னாள் கணவரின் வாதத்தை கேட்டது. அதில், தனது முன்னாள் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றும், உடல் ரீதியிலான உறவுக்கு மறுத்தார், தான் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டார், எனது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினார். மேலும், அவர் என்னை கைவிட்டு எனது வீட்டை விட்டு வெளியேறி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆகையால், அவருடன் சேர்ந்துவாழ எனக்கு விரும்பமில்லை. விவாகரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மனு தாக்கல் செய்த பெண்ணின் முன்னாள் கணவர் கோர்ட்டில் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவருடன் உடல் ரீதியிலான உறவுக்கு மறுத்தல், வெறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக கணவரை சந்தேகப்படுதல் போன்றவை கொடூர குற்றம் எனக்கூறினர். மேலும், கணவர் தாக்கல் செய்த மனுவில் விவாகரத்து வழங்கி மாவட்ட கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவாகரத்தை ரத்து செய்யக்கோரி பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com