

பெங்களூரு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். எனினும், 2023-ம் ஆண்டு அக்கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியானது. கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத சூழலில், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது.
எனினும், நெருக்கடியான காலகட்டத்தில் சித்தராமையா எனக்கு துணை நின்றவர். சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டத்தில் அவருக்கு நான் துணை நின்றேன் என டி.கே. சிவக்குமார் கூறினார். இதன்பின்னர் இந்த விவகாரம் பெரிதும் பேசப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய கட்சி மேலிடம் உத்தரவு அளித்து விட்டது என சித்தராமையாவின் மகனான எம்.எல்.சி. யதீந்திரா சமீபத்தில் கூறினார். இதனால், அந்த பூசல் ஏற்பட்டது உண்மைதான் என ஒருபுறம் உறுதியானதுடன், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்படைந்தது. இதுபற்றி டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்டபோது, இந்த விவாதத்திற்குள் மீண்டும் செல்ல மறுத்து விட்டார்.
இந்த நிலையில், முதல்-மந்திரி பதவி பற்றி சிவக்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் கூறும்போது, அது விசயத்தில் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளோம். சற்று தாமதம் ஆனாலும், முதல்-மந்திரி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்றார்.
இதனை குறிப்பிட்டு நிருபர்கள் சித்தராமையாவிடம் கேட்டபோது, முதல்-மந்திரி பதவி விவகாரத்தில், கட்சி மேலிட கட்டளைக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்பட வேண்டும் என்றார். தலைமை மாற்றம் தவிர, வேறு எதுவும் உங்களால் கேட்க முடியாதா? என கோபம் அடைந்த அவர், நீங்கள் வேறெதுவும் கேட்பதில்லை என்றும் நிருபர்களிடம் ஆவேசப்பட்டார்.
இதனை மட்டுமே கேட்கிறீர்கள். இந்த பேச்சை தொடங்கி 3 மாதங்களாகி விட்டன. இதனை தயவு செய்து மீண்டும் என்னிடம் கேட்காதீர்கள் என சற்று வருத்தத்துடனேயே கூறினார்.
இந்த நிலையில், கர்நாடக சமூக நலத்துறை மந்திரி மகாதேவப்பா சமீபத்தில் பேசும்போது, கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கான மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வலிமையாக உள்ளது என்று கூறினார்.
இந்த சூழலில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், முதல்-மந்திரி பதவி விவகாரம் ஆனது கட்சியின் மேலிடம், சித்தராமையா மற்றும் நான் முடிவு செய்ய வேண்டிய விசயம். அதற்கான நேரம் வரும்போது, அந்த முடிவை பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இது ஒன்றும் ரகசிய ஒப்பந்தம் அல்ல. நேரம் வரும்போது சித்தராமையாவே மக்களிடம் அதற்கான தகவலை அளிப்பார் என கூறினார். கர்நாடக சமூக நலத்துறை மந்திரி மகாதேவப்பா பேசியது பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், மகாதேவப்பா ஒரு பெரிய மனிதர். அவர் கட்சியின் மேலிடம் என்ற அளவுக்கு முன்னேறியுள்ளார். அவர் பேசியது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. கட்சியே அதுபற்றி முடிவு செய்யும் என கூறினார்.