

புதுடெல்லி,
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ், மத்திய பொதுப்பணித்துறை இயங்கி வருகிறது. மத்திய அரசின் முக்கியமான கட்டுமான பணிகளை இந்த துறைதான் கவனிக்கிறது.
இந்தநிலையில், பிரதமர் மோடியால் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அடிக்கல் நாட்டு விழாவுக்கும், திறப்பு விழாவுக்கும் தயாராக உள்ள திட்டங்களின் விவரங்களை அளிக்குமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.
இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2024-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதா உள்ளது. இந்த பின்னணியில் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு, அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வனம், சுற்றுச்சூழல் துறைகளின் ஒப்புதல் பெறும் பணிகள் முடிந்த திட்டங்கள் மட்டுமே அடிக்கல் நாட்டு விழாவுக்கு தயாரான திட்டங்களாக கருதப்படும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மேலும், எந்த திட்டத்துக்காவது பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதா என்ற விவரத்தையும் கேட்டுள்ளது. திட்ட செலவு, பணி தொடங்கும் தேதி, முடிவடையும் தேதி ஆகிய விவரங்களையும் கேட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய நாடாளுமன்றம் கட்டுமான பணியை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க மத்திய பொதுப்பணித்துறை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.