

புதுச்சேரி,
புதுச்சேரியில் ரூ.2,713 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ரூ.1,142 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.1,571 கோடியில் 74 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காரைக்கால் என்.ஐ.டி.யின் அப்துல்கலாம் பிளாக், புதுச்சேரி பல்கலையின் கூடுதல் கட்டடங்கள் திறந்து வைத்தார்.
திட்ட பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
மகாகவி பாரதியார், அரவிந்தர், அன்னை ஆகியோர் வாழ்ந்த ஆன்மிக பூமி புதுச்சேரி. புதுச்சேரி சித்தர்கள், கவிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. இந்திய தேசி பெருநெருப்பின் மையம் புதுச்சேரி.
உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளோம். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றை உள்ளடைக்கிய பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம்.
மத்திய மாநில அரசுகள் இணைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதற்கு புதுச்சேரியே உதாரணம். புதுவையில் சுற்றுச்சூழல் மாசை குறைப்பதில் மின் வாகனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநில அரசின் முயற்சிகள் மக்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்றி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் வளர்ச்சி.
வணிகம், கல்வி, ஆன்மிக, சுற்றுலாவில் உறுதியளித்தப்படி புதுவையை முன்னேற்றியுள்ளோம்.இளைஞர்களின் கனவை நிறைவேற்றுவதே முதன்மை இலக்கு. புதுச்சேரி அரசில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதுச்சேரியில் ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.
கிராமப்புற, நகர்புற சாலை வசதி மேம்பாட்டுக்கு நடவடிகை எடுத்து வருகிறோம். மக்கள் நலத்திட்டங்கள், குடிநீர், சுகாதார வசதிகள், கடற்கரை மேம்பாட்டை தொடங்கி வைத்துள்ளோம்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரத்திற்குள் செல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காரைக்காலில் தொடங்கப்பட்ட அப்துல்கலாம் மையம், விடுதிகள் போன்றவை கல்வி வளர்ச்சியில் பங்காற்றும்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் போக்குவரத்தை சீர்படுத்த திறன்மிகு திட்டங்களை மேற்கொள்கிறோம்.
ரூ.440 கோடியில் மேம்பாலங்கள் கட்டுதல், போக்குவரத்தை சீர் செய்வதற்கான திட்டங்களை உருவாக்கி உள்ளோம். கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலைகளை மேம்படுத்த ரூ. 30 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் தீட்டியுள்ளோம். சென்னையில் இருந்து புதுச்சேரி, காரைக்கால் வழியாக கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமையும்.
காங்கிரஸ் - திமுக ஆகிய கட்சிகள் புதுச்சேரி வளர்ச்சிக்கு வேகத்தடையாக இருந்தன. காங்கிரஸ் - திமுக ஆட்சி எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஊழல் மிகுந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கின்றன. மக்கள் அதை விரும்பவில்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ரேஷன் கடைகளில் அரிசி கூட இல்லை. காங்கிரஸ், திமுக ஆட்சியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர்.குற்றங்கள் அதிகரிப்பு, அரசியல் நிலையற்றதன்மை போன்ற நிலைதான் இருந்தது.
டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏடிஎம்-ஆக புதுச்சேரியை மாற்றியது காங்கிரஸ். மக்கள் நன்றாக இருந்தால்தான் நாடு முன்னேற முடியும். அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.