

மராட்டியத்தின் 75 கேலிச்சித்திர கலைஞர்களின் படைப்புகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை கொண்ட 'மகாராஷ்டிரா சி ஹாஸ்யரேகா" என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னா விஸ், உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "நாங்கள் ஒரே மேடை யில் இருப்பதை பார்த்து பலரும் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதும், சிரித்து பேசுவதும், தேநீர் அருந்துவதும் மராட்டியத்தின் நீண்டகால அரசியல் பாரம்பரியம்" என்றார்.
அதனைத்தொடர்ந்து உத்தவ் தாக்கரே பேசுகையில், "ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் மிகப்பெரிய ஆயுதம் அவனது தூரிகைதான். பால் தாக்கரேவுக்காக கட்டப்பட்டு வரும் நினைவிடத்திலும் அவருடைய கேலிச்சித்திரங்கள் இடம்பெறும். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் 100 ஆண்டுகால வரலாற்றை தன்னுள் கொண்ட ஒரு புதையல்" என்று புகழாரம் சூட்டினார். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜனதா மற்றும் சிவசேனா இடையே அரசி யல் ரீதியாக பெரும் பிளவு ஏற்பட்ட நிலையில், இந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.