மராட்டியத்தில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு - சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி என உறுதி

மராட்டியத்தில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பேசிய அவர், சிவசேனாவுடன் இணைந்து விரைவில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.
மராட்டியத்தில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு - சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி என உறுதி
Published on

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா ஆதரவுடன் பாரதீய ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகிற 9-ந் தேதி சட்டசபையின் பதவி காலம் முடிவதால், அந்த மாநில சட்டசபைக்கு கடந்த 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

மற்றொரு கூட்டணியில் காங்கிரசுக்கு 44 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன. இதர கட்சிகள் சார்பில் 16 பேரும், சுயேச்சைகள் 13 பேரும் வெற்றி பெற்றனர்.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதும் என்ற நிலையில், 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் சமபங்கு கோரிக்கையை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்வைத்தார். அதன்படி முதல்-மந்திரி பதவியை தலா 2 ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, மந்திரி பதவிகளை சரிசமமாக பகிர்ந்து கொள்வது என நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரேயின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆட்சியில் சமபங்கு அளிப்பது தொடர்பாக சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதனால் மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் உள்ள சட்டமன்ற கட்டிட அரங்கத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில் 49 வயது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக மீண்டும் தேர்வு செய்யும் தீர்மானத்தை மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முன்மொழிந்தார். இதனை அடுத்து, அவர் சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, மராட்டியத்தில் கூட்டணி ஆட்சிக்காக (பாரதீய ஜனதா, சிவசேனா) மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். எனவே எங்களது கூட்டணி கட்சிகள் விரைவில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

இதற்கிடையே சட்டசபை சிவசேனா தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மும்பை தாதரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சட்டசபை சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இரு கட்சிகள் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்தபோதிலும், திரைமறைவில் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com