சமூக இடைவெளியை மறந்து வாரணாசியில் கங்கையில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சமூக இடைவெளியை மறந்து கங்கையில் புனித நீராடவும், முக கவசமின்றி சாமி தரிசனமும் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
சமூக இடைவெளியை மறந்து வாரணாசியில் கங்கையில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
Published on

வாரணாசி,

உத்தர பிரதேசத்தில் வாரணாசி நகரில் அமைந்த கங்கை ஆற்றில் சவான் மாதத்தின் 2வது திங்கட்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் திரளாக கூடி புனித நீராடினர். இதில், கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் காற்றில் பறக்க விடப்பட்டது.

இதேபோன்று, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்ய ஒன்றாக குவிந்தனர். அவர்கள் முக கவசமின்றி சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தனர்.

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் கொரோனா பரவல் குறைந்திருந்த சூழலில், சிவராத்திரி மற்றும் கும்பமேளா ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட விசயங்களை மறந்து குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சம் என பதிவானது. அதன்பின்பு அந்த மாத இறுதிக்குள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து நாள்தோறும் 4 லட்சம் என்ற அளவில் உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

சமீப காலங்களாக கொரோனாவின் 2வது அலை தீவிரம் குறைந்துள்ளது என்றபோதிலும், மக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் 3வது அலை தோன்ற கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து காலையிலேயே கங்கையில் புனித நீராடவும், சாமி தரிசனமும் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com