சபரிமலையில் போராட்டம் காரணமாக நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்டார்

சபரிமலையில் நிலவும் சூழ்நிலை குறித்து செய்தியாளர் சுஹாசினி ராஜ் பேசுகையில், “பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்த விரும்பவில்லை, எனவே கோவிலுக்கு செல்லும் முயற்சியை நான் கைவிடுகிறேன்,” என்று கூறியுள்ளார்.
சபரிமலையில் போராட்டம் காரணமாக நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்டார்
Published on

தொடரும் போராட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது.

கோவிலுக்கு செல்லும் வாகனங்களை பக்தர்கள் சோதனையிடும் சம்பவம் நிகழ்ந்தது. நேற்று கோவில் திறக்கப்பட்ட நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர். போராட்டம் காரணமாக நேற்று தடியடி நடந்தமையால் பதற்றமான நிலை நீடிக்கிறது. அங்கு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சபரிமலையில் பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பெண்களை பத்திரமாக அழைத்து செல்லும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது. கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் திரும்பினார்

பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி தன்னுடன் பணியாற்றுபவருடன் பம்பாவில் இருந்து கோவிலுக்கு செல்ல பயணம் மேற்கொண்டார். பம்பாவில் இருந்து பெண் ஒருவர் கோவிலுக்கு செல்வதை பார்த்த பக்தர்கள் அவரை நோக்கி வந்துள்ளனர். அவருடைய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர். நிலை மிகவும் மோசம் அடையவும் அப்பகுதியில் போலீசார் குவிந்தனர். சுஹாசினிக்கும் அவருடன் வந்தவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் அவர் மேற்கொண்ட பயணத்தை தொடங்கினார். இருப்பினும் பக்தர்கள் போராட்டம் காரணமாக மராகோட்டம் பகுதியில் நிலைமை மோசமானது. மேலும் அதிகமான பக்தர்கள் அவருடைய பாதையை வழிமறித்து போராட்டம் மேற்கொண்டார்கள். இதனையடுத்து நிலையை உணர்ந்துக்கொண்ட சுஹாசினி தன்னுடைய பயணத்தை தொடரலாம் கீழே இறங்கிவிட்டார். அவருடன் வந்தவருடன் பம்பையை நோக்கி திரும்பிவிட்டார்.

உணர்வை காயப்படுத்த விரும்பவில்லை

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்த விரும்பவில்லை, எனவே என்னுடைய பயணத்தை பாதியில் விடுகிறேன், பம்பைக்கு திரும்புகிறேன், என கூறியுள்ளார். பின்னர் அவர்களை பாதுகாப்பாக போலீஸ் பம்பை அழைத்து சென்றது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் ஜெனரல் மனோஜ் அப்ரகாம் பேசுகையில், சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்க தயாராகவே உள்ளோம், என கூறியுள்ளார்.

இதற்கிடையே கோவிலுக்கு செல்லும் போது பக்தர்கள் கற்களை கொண்டு வீசினார்கள், போலீஸ் தீவிர பாதுகாப்பை கொடுத்தனர் மற்றும் மருத்துவ வசதியை கொடுத்தனர் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com