மரத்தில் இருந்து 'புனித நீர்' வருவதாக நினைத்து வணங்கிய பக்தர்கள்... அடுத்து நடந்த திருப்பம்


மரத்தில் இருந்து புனித நீர் வருவதாக நினைத்து வணங்கிய பக்தர்கள்... அடுத்து நடந்த திருப்பம்
x

மரத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான காரணத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி பகுதியில், பிரேம்லோக் பூங்கா அருகே மே-பூ மரம் என்று அழைக்கப்படும் குல்மோகர் மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் தண்டில் இருந்து கடந்த 6-ந்தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேற தொடங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மரத்தில் இருந்து வருவது 'புனித நீர்' என்று நினைத்து அதனை வழிபடத் தொடங்கிவிட்டனர். இது குறித்த தகவல் வேகமாக பரவிய நிலையில், மக்கள் அங்கு குவியத் தொடங்கினர். அவர்கள் மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

மரத்தில் இருந்து வரும் தண்ணீருக்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக நம்பி, சிலர் அந்த தண்ணீரை தீர்த்தம் போல் பருகினர். சிலர் அதனை தங்கள் உடலில் தெளித்துக் கொண்டனர். இதனிடையே இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், இது பிம்ப்ரி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், மரத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிந்தனர். நிலத்திற்கு அடியில் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் கசிந்துள்ளது என்றும், குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே மரம் இருந்ததால், மரத்தின் தண்டு வழியாக தண்ணீர் கசிந்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஒருவர், "சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகிற்கே ஆசானாக, பல தத்துவ ஞானிகளை கொண்டிருந்த இந்திய நாடு, இன்று மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருப்பது வேதனையளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story