டி.ஜி.பி. நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

டி.ஜி.பியை தேர்வு செய்வதற்கான பெயர்களை யு.பி.எஸ்.சி.க்கு ஒரு வாரத்திற்குள்ளாக பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி. நியமனம்: தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டிற்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கான பெயர்களை ஒரு வார காலத்திற்குள் யு.பி.எஸ்.சி. அமைப்புக்கு பரிந்துரையாக வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் என்பது தவறு. புது டி.ஜி.பி. நியமனம் செய்ய வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட் உத்தரவை தமிழக அரசுக்கு கடைபிடிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “டி.ஜி.பி. பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. யு.பி.எஸ்.சி.யில் சில குழப்பம் நிலவுகிறது. டி.ஜி.பி. இல்லாததால், தேர்வுக்குழுவில் கூடுதல் உள்துறை செயலாளரை இணைக்க வேண்டும் என கோரியிருந்தோம். இதற்கு யு.பி.எஸ்.சி. ஏற்கவில்லை. டி.ஜி.பி. தேர்வு செய்பவர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என நிபந்தனை சேர்க்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர். மற்றொருவர், டி.ஜி.பி. இல்லாதபட்சத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர் குழுவில் இடம் பெற வேண்டும். டி.ஜி.பி. யாக தேர்வு செய்யப்படுபவர், சட்டம் ஒழுங்கு, உள்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட 4 பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதியை தமிழகத்துக்கு தளர்த்தப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கான பெயர்களை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை இறுதி செய்து இரண்டு வாரங்களுக்குள் யு.பி.எஸ்.சி. தேர்வு செய்து புதிய டி.ஜி.பி. பெயரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com