‘டி.ஜி.பி. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் நானே ஆஜராகி வாதாடுவேன்’

டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் “கோர்ட்டில் நானே ஆஜராகி வாதாடி தக்க பதில் அளிப்பேன்” என்று டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.
‘டி.ஜி.பி. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் நானே ஆஜராகி வாதாடுவேன்’
Published on

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும், சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார். ரூபாவின் குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மறுத்துள்ளார்.

பின்னர் தன் மீது குற்றச்சாட்டு கூறிய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கடந்த 26-ந் தேதி சத்திய நாராயணராவ் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். அதில், தன் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகளுக்காக நோட்டீசு கிடைத்த 3 நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அதிகாரி ரூபா மீது ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் சத்திய நாராயணராவ் குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக டி.ஐ.ஜி. ரூபா கூறியதாவது:-

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு நான் அறிக்கை அளித்தேன். ஒரு அரசு அதிகாரியாக என்னுடைய கடமையை செய்தேன்.

ஆனால் அவர் நான் கொடுத்த அறிக்கையை ஆய்வு செய்து, சிறையில் நடந்த முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், எனக்கு 2 நோட்டீசுகளை அனுப்பினார். நான் சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து, அவருக்கு அறிக்கை அளித்ததும், எனக்கு ஆதரவாக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் யாருக்கு ஆதரவாக செயல்பட்டார்? என்பது தெரியவில்லை. அது அவருக்கு தான் தெரியும்.

நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்காக சத்திய நாராயணராவ் வக்கீல் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார். மானநஷ்ட வழக்கு தொடர போவதாகவும் நோட்டீசில் அவர் கூறியுள்ளார். அவர் தொடரும் மானநஷ்ட வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.

அந்த வழக்கில் நானே கோர்ட்டில் வாதாடி தக்க பதில் அளிப்பேன். பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்தது உண்மை. இந்த முறைகேடுகளுக்காக லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் பேரில் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்.

இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com