மே.வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் ஜெகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளரானது எப்படி?

மேற்கு வங்க கவர்னராக தங்கர் பதவியேற்ற பிறகு, தங்கர் மற்றும் ஆளும் கட்சி இடையே அடிக்கடி குழப்பமான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்தது.
மே.வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் ஜெகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளரானது எப்படி?
Published on

கொல்கத்தா,

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்(என் டி ஏ) வேட்பாளராக மேற்குவங்க மாநில கவர்னர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜக சார்பில் மீண்டும் வெங்கையா நாயுடு போட்டியிட வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்பட்டது. மேலும், முன்னாள் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் போன்ற பலர் வேட்பாளர் பரிசீலனையில் இருந்தனர்.

ஆனால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகிய பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை முறைப்படி அறிவித்த பாஜக தேசிய தலைவர் நட்டா, "ஜெகதீப் தங்கர் ஒரு விவசாயியின் மகன். தனது திறமையால் கவர்னராக உயர்ந்தவர்" என்று பெருமைப்படுத்தினார்.

1951 இல் பிறந்த ஜெகதீப் தங்கர், 1989 இல் அரசியலில் நுழைந்தார், அதே ஆண்டு ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த காலங்களில் தன்னை ஒரு அரசியல்வாதி என்று கூறிக்கொண்ட தங்கர், ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இயற்பியலில் பட்டமும், 1978-79ல் ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் எல் எல் பி பட்டமும் பெற்றார். அவர் சுதேஷ் தன்கர் என்பவரை மணந்தார், அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி பெற்ற தன்கர், 1990 ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், அதே ஆண்டில் அவர் மத்திய மந்திரியானார். தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான ஜக்தீப் தன்கர் 1993 முதல் 1998 வரை கிஷன்கர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜஸ்தான் விதான் சபா உறுப்பினராகவும் இருந்தார்.

2019 ஜூலையில் மேற்கு வங்க கவர்னராக பதவியேற்ற பிறகு, தங்கர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் அதன் தலைவர் இடையே மோதல் அடிக்கடி குழப்பமான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்தது.

மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை முதல் அவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் வரையிலான பிரச்சினைகள் மற்றும் சிவில் அதிகாரத்துவம் மற்றும் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் தலையிடுவது வரை இருவரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

பாஜகவின் முகவராக அவர் செயல்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறது. விதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் நடந்து கொண்டதாக தன்கர் கூறியுள்ளார்.

இத்தகைய சர்ச்சைகளுக்கு பின், துணை ஜனாதிபதி பதவிக்கு ஜெகதீப் தங்கரை பாஜக கூட்டணி முன்மொழிந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com