தர்மஸ்தலா வழக்கு விவகாரம்: கர்நாடக எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தமிழக காங்கிரஸ் எம்.பி.

தன்னைப் பற்றி யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகாந்த் செந்தில் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பெண்களின் சடலங்களை புதைக்க உதவி செய்ததாக கூறி சி.என்.சின்னய்யா என்பவர் காவல்துறையினரிடம் சாட்சியம் அளித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவினர் தர்மஸ்தலாவில் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில், வாக்குமூலம் அளித்த சி.என்.சின்னய்யா, பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஒரு புனிதமான இந்து வழிபாட்டுத் தளம் மீது அவதூறு பரப்பும் நோக்கில் தர்மஸ்தலா பற்றிய வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம் அளித்த சி.என்.சின்னய்யா தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்றும் கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்தன் ரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த சசிகாந்த் செந்தில் எம்.பி., அரசியல் காரணங்களுக்காக வலது சாரி அரசியல்வாதிகள் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் துணை கமிஷனராக சசிகாந்த் செந்தில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், தர்மஸ்தலா வழக்கு முழுவதும் சசிகாந்த் செந்தில் மூலமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்று ஜனார்தன் ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜனார்தன் ரெட்டி மீது சசிகாந்த் செந்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கங்காவதி தொகுதி எம்.எல்.ஏ. ஜனார்தன் ரெட்டி சில வாட்ஸ்அப் தகவல்களை வைத்துக் கொண்டு, தர்மஸ்தலா வழக்கில் என் பெயரை தொடர்புபடுத்தி பேசி வருகிறார். இந்நிலையில் பொது நலனுக்காகவும், எனது தனிப்பட்ட உரிமை அடிப்படையிலும் ஜனார்தன் ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
எனது மனு கோர்ட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்படும். அதன் பின்னர் ஜனார்தன் ரெட்டி கோர்ட்டுக்கு வந்து என் மீது எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதை அவர் விளக்க வேண்டும். இந்த வழக்கு வரும் 11-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. மேலும் என்னைப் பற்றி யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் இதே போல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.






