

பெங்களூரு
கர்நாடக மாநிலம் தார்வார் புறநகர் இட்டிகட்டி அருகே தட்சின கொப்பா கிராசில் பெலகாவி-தார்வார் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரியும், சுற்றுலா வேனும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் சுற்றுலா வேன் சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
11 பேர் பலி
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தார்வார் புறநகர் போலீசாரும், அந்தப் பகுதி பொதுமக்களும் விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
மீதமுள்ள 5 பேருக்கு கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் 9 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பள்ளி மாணவிகள்
போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் தாவணகெரே (மாவட்டம்) டவுனில் வித்யாநகர் எம்.சி.சி. ஏ மற்றும் பி பிளாக்கை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் தாவணகெரே செயின்ட் பால்ஸ் கான்வென்ட் பள்ளியின் முன்னாள் மாணவிகள் என்பதும் தெரியவந்தது.
சமீபத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர்கள் கோவா மாநிலம் பானாஜிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று அவர்கள் வேனில் கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றதும், அப்போது விபத்தில் சிக்கி 11 பேர் பலியானதும் தெரியவந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ.வின் மருமகள்
பலியானவர்களில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. குருசினனகவுடாவின் மகன் டாக்டர் ரவிக்குமாரின் மனைவி பிரீத்தி, டாக்டர் பிரகாஷ் மாட்டிஹள்ளியின் மனைவி டாக்டர் வீணா பிரகாஷ், மஞ்சுளா, ராஜேஸ்வரி மற்றும் வேன் டிரைவரான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரை சேர்ந்த மல்லிகார்ஜுனா(வயது 26) உள்பட 11 பேர் பலியானது தெரியவந்தது.
உயிரிழந்த 10 பெண்களில் 4 பேர் மருத்துவர்கள். மற்றவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர்கள். பலியான பெண்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்பதும், அவர்கள் பொங்கல் விடுமுறையைக் கொண்டாட கோவா செல்ல வெள்ளிக்கிழமை காலை தேவநாகரியிலிருந்து புறப்பட்டு, காலை உணவு சாப்பிட தர்வார் வந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பெண்களின் குடும்ப நண்பர் தர்வாரில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், கோவாவுக்கு சுற்றுலாச் சென்றவர்களுக்காக தர்வாரில் காலை உணவு தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் வரும் வழியிலேயே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நாங்கள் பள்ளிக் காலத்திலிருந்து தோழிகள். வெகு நாள்களுக்குப் பின் நாங்கள் அவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்தோம் என கூறினார்.
கடைசி செல்பி
இந்த சம்பவம் தொடர்பாக தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவாவுக்கு சுற்றுலா சென்ற ஒரே பள்ளியின் மாணவிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலியான முன்னாள் மாணவிகள் அனைவருக்கும் திருமணமாகி கணவர், பிள்ளைகள் உள்ளனர். இதனால் அவர்களின் கணவர்கள், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவர்கள் உப்பள்ளிக்கு வந்து, பலியானவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
பள்ளித் தோழிகளான இவர்கள், தங்களது சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்பியை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். பள்ளித் தோழிகளுடன் கோவா செல்கிறோம் என்று அதில் பதிவிட்டுள்ளனர். இந்த செல்பி போட்டு சில மணி நேரத்தில் அவர்கள் விபத்தில் சிக்கியது குடும்ப உறுப்பினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.