

காந்தி நகர்,
இந்தியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் 'டிஜிட்டல் கைது' எனப்படும் ஆன்லைன் மிரட்டல் மோசடிக்கு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான 2.96 கோடி ரூபாயை இழந்துள்ளார். சுமார் 20 நாட்களாக வீட்டின் அறையிலேயே முடக்கி வைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு இந்த மோசடி நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பர்டோலி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்திரா (வயது 82). இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னைத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் "உங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சிம் கார்டு மூலம் சட்டவிரோத விளம்பரங்களும், சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றங்களும் நடந்துள்ளன. இது தொடர்பாக உங்கள் மீது மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவாகியுள்ளது" என்று கூறி முதியவரைப் பயமுறுத்தியுள்ளார்.
அதன்பின், கடந்த 8-ந்தேதி மும்பை சைபர் கிரைம் போலீஸ் என்ற பெயரில் மற்றொரு நபர் முதியவரை வீடியோ காலில் தொடர்புகொண்டார். அப்போது முதியவரை மேலும் நம்பவைப்பதற்காக, மும்பை போலீஸ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் போலி முத்திரைகள் மற்றும் கையெழுத்துக்கள் அடங்கிய போலி நீதிமன்ற உத்தரவு நகல்களை வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அதில், முதியவரின் வங்கிக் கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் பணமோசடி நடந்துள்ளதாகவும், உடனடியாக அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
"வழக்கு விசாரணை முடியும் வரை நீங்கள் யாரிடமும் பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. 24 மணி நேரமும் எங்கள் கண்காணிப்பில் வீடியோ காலில் இருக்க வேண்டும். இந்த ரகசியத்தை வெளியில் சொன்னால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கடுமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்" என்று மோசடி கும்பல் முதியவரை மிரட்டியது. இதனால் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த முதியவர், கடந்த 20 நாட்களாகத் தனது அறையிலேயே முடங்கிக் கிடந்துள்ளார்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும், வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்றாலும் தற்காலிகமாக பணத்தை அரசு கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என மோசடி கும்பல் கூறியது. விசாரணைக்குப் பின் பணம் திருப்பி தரப்படும் என்றும் அந்த போலி கும்பல் உறுதியளித்தனர்.
அதனை உண்மை என்று நம்பிய முதியவர், கடந்த 11-ந்தேதியிலிருந்து 21-ந்தேதி வரை பல தவணைகளாக தனது வங்கிக் கணக்குகளிலிருந்து உடனடியாக பணத்தை அனுப்பும் மின்னணு முறை (ஆர்டிஜிஎஸ்) மற்றும் பிற ஆன்லைன் பரிமாற்றங்கள் மூலம் மொத்தம் ரூ. 2,96,01,000 (2.96 கோடி) தொகையை மோசடி கும்பல் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
முதியவரிடம் இருந்த அனைத்துப் பணமும் தீர்ந்த நிலையிலும், மோசடி கும்பல் மேலும் பணம் கேட்டு மிரட்டியது. இதனால், வங்கியில் இருந்த தனது நிரந்தர வைப்பு நிதியை (எப்டி) எடுக்க முதியவர் பர்டோலியில் உள்ள வங்கி கிளைக்கு நேரில் சென்றார். முதியவரின் பதற்றத்தையும், அவர் அதிக தொகையை அவசரமாக எடுக்க முயல்வதையும் கண்டு சந்தேகமடைந்த வங்கி மேலாளர், அவரிடம் கனிவாக விசாரித்தார். அப்போது வங்கி மேலாளரிடம், நடந்த விவரங்களை முதியவர் கூறினார். வங்கி மேலாளர் இது முற்றிலும் "டிஜிட்டல் கைது" என்ற மோசடி என்பதை முதியவருக்கு புரிய வைத்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) சூரத் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். முதியவரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணம் பரிமாறப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியிலும், கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.