டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதேபோன்று, 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. தனியார் துறையினரும் இதை வெளியிடுகிறார்கள்.

காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.

இன்று அறிமுகம்

இந்தநிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது.

இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

9 வங்கிகள்

பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.

இதுபோல், 'டிஜிட்டல் ரூபாய் (சில்லறை பிரிவு)' என்ற டிஜிட்டல் கரன்சி, இன்னும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த கரன்சியை வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com