கர்நாடகத்தில் பல்கலைக்கழகங்களில் டிஜிட்டல் கற்றல் பாடப்பிரிவுகள்; உயர் கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு

கர்நாடகத்தில் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் டிஜிட்டல் கற்றல் பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
கர்நாடகத்தில் பல்கலைக்கழகங்களில் டிஜிட்டல் கற்றல் பாடப்பிரிவுகள்; உயர் கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
Published on

பெங்களூரு:

டிஜிட்டல் கற்றல்

கர்நாடக உயர் கல்வித்துறை சார்பில் திறன் தொடர்பு என்ற இணையதள பக்கம் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு அந்த இணையதள பக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் டிஜிட்டல் கற்றல் பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு டிகிரி பாடப்பிரிவு ஆன்லைன் கற்றலில் இருக்க வேண்டும். இதை அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்திற்குள் தொடங்க வேண்டும். கடன் வங்கி கல்வி முறையில் அனைத்து பல்கலைக்கழகங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு பயிற்சி

பல்கலைக்கழகங்கள் குறைந்தது 5 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட வேண்டும். அடுத்த 3 மாதங்களில் இந்த பணி முடிவடைய வேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தேசிய கல்வி அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல், ஜப்பான் மொழியை கற்று கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். 13 ஆயிரத்து 500 பெண் தொழில்முனைவோருக்கு ஊக்குவித்தல் முகாம் நடத்தப்படும். விரைவில் 10 ஆயிரம் பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற பணி ஆணை வழங்கப்படும்.

அறிவியல் கோளரங்கம்

படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலையை உறுதி செய்ய கர்நாடக தேர்வாணையத்தில் 2 தனி பிரிவுகள் தொடங்கப்படும். கதக்கில் மினி அறிவியல் கோளரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகல்கோட்டை, கொப்பலில் துணை மண்டல அறிவியல் மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

இதில் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் செல்வக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com